ராட்சசன் - விமர்சனம்

நடிப்பு - விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட், முனிஷ்காந்த் மற்றும் பலர் இயக்கம் - ராம்குமார் தயாரிப்பு - ஆக்சஸ் பிலிம் பேக்டரி இசை - ஜிப்ரான் தமிழ் சினிமாவுக்கென சில வரையறை இருக்கிறது. இந்த மாதிரியான கதைகள்தான் இங்கு வரவேற்கப்படும் என்று சில குறிப்பிட்ட கதைக் கருக்களைச் சுற்றியே இங்கு படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

அதுதான் 'ரிஸ்க்' இல்லாத விஷயமும் கூட. ஆனால், சிலர் வித்தியாசமாக எடுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு நம்மால் பார்க்க முடியாத, ஏற்றுக் கொள்ள முடியாத சில விஷயங்களை கதைக் கருவாக வைத்து சமயங்களில் படங்களைக் கொடுப்பார்கள். 

அப்படி சில விஷயங்கள் இங்கு நடந்தாலும், அவற்றைப் படங்களாகப் பார்க்கும் பொறுமை நமக்கு இருக்காது. மெசேஜ் சொல்கிறோம் என்று சொல்லிவிட்டு, அதைக் கருத்தாக சொல்வதை விட்டு வன்முறையாக, வன்மமாக சொல்வதற்குப் பெயர் திரைப்படம் அல்ல. இந்த 'ராட்சசன்' படத்தை அப்படி ஒரு படமாகக் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று தெரியவில்லை. ஒரு சைக்கோ கொலையாளி, அவனுக்கு சிலவற்றைப் பார்த்தால், சிலரைப் பார்த்தால் வெறுப்பு. அதனால் அவர்களைக் கொலை செய்கிறான். அவர்கள் எப்படி கொல்லப்படுகிறார்கள், எதற்காக கொல்லப்படுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறை தடுமாறுகிறது. ஆனால், கதாநாயகன் மட்டும் அதை எப்படியோ கண்டுபிடித்துவிடுகிறான். 

இது மாதிரியான கதைகள் கொண்ட 'சைக்கோ' படங்கள் தமிழ் சினிமாவில் ஏற்கெனவே பல வந்துவிட்டன. அதே போன்றதொரு 'சைக்கோ' படத்தைத்தான் இப்படத்தின் இயக்குனர் ராம்குமார் கொடுத்திருக்கிறார். 'முண்டாசுபட்டி' என்ற நகைச்சுவையான கலகலப்பான கற்பனைக்கும் எட்டாத ஒரு மாறுபட்ட படத்தை தன் முதல் படமாகக் கொடுத்து முத்திரை பதித்தவரா இப்படி ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட வைக்கிறார். 

அதிலும், படத்தின் முதல் காட்சியில் ஒரு சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாகக் காட்டுகிறார்கள். கேமரா கொஞ்சம் கொஞ்சமாக அந்த சிறுமியின் பிணத்தை நோக்கி நகர்ந்து, கடைசியில் குளோசப்பில் அந்த சிறுமியின் தோண்டப்பட்ட கண்களுக்குள் நுழைந்து.....யப்பா....என்ன ஒரு கொடூரம். இதையெல்லாம் ஆரம்பத்திலேயே தாங்கிக் கொள்ளும் தைரிய மனம் படைத்தவர்கள் மட்டுமே படத்தைத் தொடர்ந்து பார்க்க முடியும். 

அடுத்தடுத்து நான்கைந்து சிறுமிகள், அதிலும் பள்ளியில் படிப்பவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். பெண்களை, சிறுமிகளை, பெண்குழந்தைகளை சினிமாவில் கூட காட்டுவதற்கு ஒரு கட்டுப்பாடு வைப்பது நலம். பதினைந்து வயது சிறுமிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டு அவர்களுடைய கொல்லப்பட்ட உடலைக் காட்டுவதில் கூட ஒரு எல்லை வேண்டாமா, இப்படியா கொடூரமாகக் காட்டுவது. 

அந்த வயது சிறுமிகளை தங்களது குடும்பத்தில் வைத்திருப்பவர்கள் எப்படி படம் பார்ப்பார்கள் என்று இயக்குனர் யோசிக்க வேண்டாமா ?. சரி படத்தில் மெசேஜ் வைத்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். அப்படி எதுவுமே இல்லை, ஒரே ஒரு காட்சியில் ஒரு மகளிர் பள்ளியில் ஒரு வகுப்பறையில் வந்து விஷ்ணு விஷால் ஒரு சில நிமிடங்கள் அறிவுரை சொல்கிறார், அவ்வளவுதான். மற்றபடி படத்தின் மொத்த நீளமான 2 மணி நேரம் 50 நிமிடங்களில் 2 மணி நேரம் 28 நிமிடம் ஒரு பதைபதைப்புடனேயே படத்தை ரசிக்க வேண்டியிருக்கிறது. விஷ்ணு விஷால் , நிஜமான போலீஸ் அதிகாரியின் மகன். அதனால், அவருக்கு ஒரு பயிற்சி இன்ஸ்பெக்டராக நடிப்பது பெரிய வேலை இல்லை. பெண் உதவி கமிஷனரையும் தாண்டி ஆர்வக் கோளாறில் இந்த வழக்கை விசாரித்து குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் என துடிப்புடன் இருக்கிறது. 

திரைப்பட இயக்குனர் ஆக ஆசைப்படும் ஒரு நாயகனை போலீசாக மாற்றிய ஒரு படம் இதுவாகத்தான் இருக்கும். நேரடியாகவே விஷ்ணுவை ஒரு போலீசாகக் காட்டியிருந்தால் அது படத்திற்கு கூடுதல் பலமாக இருந்திருக்கும். அமலா பால், கதாபாத்திரம் 'காக்க காக்க' ஜோதிகாவை ஞாபகப்படுத்துகிறது. 

அதே போல காட்டன் புடவை, ஹேர்ஸ்டைல் என காட்டியிருக்கிறார்கள். ஆனால், அமலாவுக்கு அதிக வேலையில்லை. சில காட்சிகளில் வருகிறார், விஷ்ணுவை சந்தேகிக்கிறார், பின்னர் காதலிக்கிறார், கொஞ்சம் பயப்படுகிறார். படத்திற்கு இவருடைய கதாபாத்திரம் எந்த வலுவையும் சேர்க்கவில்லை. படத்தின் வில்லன் யார் என்பது சஸ்பென்ஸ். இவர்தான் வில்லன், கொலைகளைச் செய்கிறார் என்று சொன்னால் இருக்கும் சுவாரசியமும் போய்விடும். 

அதற்காக 20 வருடங்களுக்கு முன்னால் தான் பள்ளியில் படித்த போது அவமானப்படுத்தப்பட்டதற்காக சம்பந்தமேயில்லாமல், தற்போது சென்னையில் சில சிறுமிகளை அந்த 'சைக்கோ' கொலை செய்வதற்கான காரணம் என்ன என்று சொல்லப்படவில்லை. வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை 'மொட்ட' என்று ஒரு உலகத்தரம் வாய்ந்த பள்ளி மாணவர்கள் படம் வரைந்து, பாகங்களைக் குறியிட்டு கிண்டலடிப்பது ரொம்பவே ஓவர். முனிஷ்காந்த், காளி வெங்கட், சூசன் அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 

வில்லனின் உண்மையான முகம் என்ன என்பது கடைசிவரை தெரியவில்லை. ஜிப்ரான் பின்னணி இசை, காட்சிகளின் பரபரப்பை மேலும் கூட்டியிருக்கிறது. பெண்கள் பள்ளியில் இருக்கும் ஆண் ஆசிரியர் ஒருவர், குறைவான மதிப்பெண்கள் எடுக்கும் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார் என்ற காட்சிகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. 

வெளிப்படையாகக் காட்டவில்லை என்றாலும் அந்தக் காட்சிகளை தெரியாத அளவிற்கு வேறு விதமாகக் காட்டியிருக்கலாம் அல்லது தவிர்த்திருக்கலாம். சைக்கோ எதனால் கொலை செய்கிறான் என்ற காரணம் தெரிய வரும் போது அவன் மீது வெறுப்பு வருவதைவிட பரிதாபம்தான் வருகிறது. 

பள்ளி வயது கதைகளோ, சம்பவங்களோ ஒரு திரைப்படத்தில் வரும் போது அதைப் படமாகப் பார்க்கும் பள்ளி சிறுவர்கள், சிறுமியர்கள் அதைப் பார்த்து கற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் இருக்கிறது ?. மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் வலி எப்படி இருக்கும் என்று புரிந்து கொள்வதைவிட, அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நெகட்டிவ்வாக புரிய வைத்திருக்கிறார் இயக்குனர்.
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்