கூத்தன் - விமர்சனம்

நடிப்பு - ராஜ்குமார், ஸ்ரீஜிதா கோஷ், கிரா நாராயணன், ஊர்வசி மற்றும் பலர் தயாரிப்பு - நீல்கிரிஸ் டிரீம்ஸ் என்டர்டெயின்மென்ட் இயக்கம் - வெங்கி இசை - பால்ஸ் ஜி வெளியான தேதி - 11 அக்டோபர் 2018 நேரம் - 2 மணி நேரம் 12 நிமிடம் ரேட்டிங் - 1/5 தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல புதுமுக இயக்குனர்கள், புதுமுக நடிகர்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். 

அவர்கள் சினிமாவைத் தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு படங்களைத் தருகிறார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது. டிஜிட்டல் சினிமா வளர்ந்த பிறகு பலரும் படமெடுக்க வருவது சிறப்பான ஒன்றுதான். ஆனால், எந்தக் கதையை சினிமாவாக எடுக்க வேண்டுமோ, எப்படி எடுத்தால் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள் என்பதைப் புரிந்து கொண்டு எடுத்தால் செலவு செய்து எடுக்கும் பணம் கொஞ்சமாவது திரும்ப வரும். 

தமிழ் சினிமாவில் ஏற்கெனவே சில படங்கள் பார்த்த 'டிவி ஷோ' பற்றிய கதையை இந்தப் படத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறார் அறிமுக இயக்குனர் வெங்கி. சினிமாவில் ஜுனியர் ஆர்ட்டிஸ்டாக இருக்கும் ஊர்வசியின் வளர்ப்பு மகன் ராஜ்குமார். அவருக்கு சிறந்த நடனக் கலைஞர் ஆக வர வேண்டும் என்பது லட்சியம். 

ஆசிய அளவில் நடக்கும் டிவி நடனப் போட்டியில் கலந்து கொண்டு ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார். அவர்களது குழுவிற்குப் போட்டியாக டான்ஸ் பயிற்சிப் பள்ளியை நடத்தி வரும் நாகேந்திர பிரசாத் பல பிரச்சினைகளைச் செய்கிறார். 

முடிவில் ராஜ்குமார் குழுவினர் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. அறிமுக நடிகர் ராஜ்குமார், சுமாராக நடிக்கிறார், நன்றாக நடனமாடுகிறார். முதல் படத்தில் அவருக்கு சிரமமான காட்சிகள் எதையும் இயக்குனர் வைக்கவில்லை. படத்தின் நாயகியாக ஸ்ரீஜிதா கோஷ். 

பார்க்க பளிச் என இருக்கிறார், இவரும் நன்றாக நடனமாடுகிறார். படம் நடனம் சம்பந்தப்பட்டது என்பதால் நடனமாடத் தெரிந்தவர்களைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார்கள். படத்தில் நாயகியின் அக்கா கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ளது. 

அக்காவாக கிரா நாராயணன். தமிழ் சினிமாவில் உள்ள அக்கா, அண்ணி கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகை. நன்றாக நடனமாடவும் செய்கிறார். இவரை தமிழ் சினிமா நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

படத்தின் வில்லனாக நாகேந்திர பிரசாத். டான்ஸ் அகாடமி ஒன்றை நடத்திக் கொண்டு அனைத்திலும் தான்தான் முதலிடத்தில் வர வேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறார். தமிழ் சினிமாவில் பல படங்களில் பார்த்துப் பழகிய அதே வில்லத்தனம். 

ஊர்வசி நகைச்சுவை என்ற பெயரில் சோதிக்கிறார். பாக்யராஜ், ராம்கி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். நாயகனின் நண்பர்கள் என விஜய் டிவி கலக்கப் போவது யாரு நட்சத்திரங்கள் சிலர் நடித்திருக்கிறார்கள். அவர்களாவது கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கலாம். 

பால்ஸ் ஜி இசையமைத்திருக்கிறார். நடனம் சார்ந்த படத்திற்கு அதிரடியான பாடல்களைக் கொடுத்திருக்கலாம். டி.ராஜேந்தர் பாடியுள்ள 'மங்கிஸ்தா கிங்கிஸ்தா' பாடல் மட்டும் கொஞ்சம் ஆட்டம் போட வைக்கிறது. 

பெரிய திருப்புமுனைகள் எதுவும் இல்லாத ஒரு சராசரியான படம். ஒரே ஒரு அரங்கிலேயே படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கியுள்ளார்கள். இம்மாதிரியான படங்களில் பெரிதாக எதிர்பார்க்க முடியாது. ஒரு படத்தை உருவாக்கும் அளவிற்கு எண்ணம் இருக்கிறது, அப்படியே நல்ல கதையையும் தேர்வு செய்தால், இம்மாதிரியான சிறிய பட்ஜெட் படங்கள் தப்பிக்கும்.
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்