2018ம் ஆண்டு தீபாவளிக்கு தற்போது வரை 'சர்கார், திமிரு புடிச்சவன், பில்லா பாண்டி, களவாணி மாப்பிள்ளை' ஆகிய படங்கள் வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
'சர்கார்' படத்தை மிகப் பிரம்மாண்டமான அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். விஜய் நடித்த படங்களிலேயே வெளிவந்த 'மெர்சல்' படம்தான் மிகப் பெரும் அளவில் வெளியிடப்பட்டது. இப்போது அதை மிஞ்சும் அளவிற்கு 'சர்கார்' படத்தை வெளியிடப் போகிறார்களாம்.
தமிழ்நாடு, கேரளா மட்டுமல்லாது பிற மாநிலங்கள், அமெரிக்கா என உலக அளவிலும் 'சர்கார்' வெளியீடு அதிக தியேட்டர்களில் இருக்கும் என்கிறார்கள். இப்படத்தின் தெலுங்கு உரிமை, கேரளா உரிமை இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அளவிற்கு விற்கப்பட்டுள்ளது.
ஹிந்தி சாட்டிலைட் உரிமை கூட 'பாகுபலி' படங்களுக்குப் பிறகு அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்.
படத்தை தெலுங்கில் 'சர்கார்' என்ற பெயரிலேயே டப்பிங் செய்து தமிழில் வெளியாகும் அதே தினத்தில்தான் வெளியிடப் போகிறார்களாம். பொதுவாக ரஜினிகாந்த் நடித்த படங்கள்தான் தமிழ்ப் படங்களின் திரையிடலில் சாதனை வெளியீடாக இருக்கும். இந்த முறை அது 'சர்கார்' படம் மூலம் முறியடிக்கப்படும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.