நடிப்பு - கதிர், ஆனந்தி, யோகி பாபு மற்றும் பலர்
இயக்கம் - மாரி செல்வராஜ்
இசை - சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு - நீலம் புரொடக்ஷன்ஸ்
திரைப்படங்கள் என்பது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் ஒரு நாட்டின், மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படங்களாக இருக்க வேண்டும் என உலகின் தலைசிறந்த இயக்குனர்கள் சொல்வார்கள்.
தமிழ் சினிமாவில் அப்படி மண் சார்ந்த, மக்களின் வாழ்வியல் சார்ந்த படங்கள் கடந்த சில வருடங்களாக வராமல் இருந்தன. கிராமிய மணம் வீசும் படங்களைப் பார்ப்பதே அரிதாகிப் போனது. ஆனால், சமீபமாக சில புதிய இயக்குனர்களின் படங்கள் அந்தக் குறையைப் போக்கி வருகின்றன.
மலை சார்ந்த மக்களின் வாழ்வியலைச் சொன்ன 'மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தைத் தொடர்ந்து இந்த 'பரியேறும் பெருமாள்' நெல்லைச் சீமையின் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படமாக வெளிவந்துள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ், படத்தில் இடம் பெற்றுள்ள புளியங்குளம் கிராமத்திற்குள் நம்மையும் புகுத்திவிட்டார் என்று சொல்லும் அளவிற்கு படத்துடன் நம்மை ஒன்ற வைத்துள்ளார்.
ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு கதை இருக்கிறது, இந்தக் கதை இயக்குனர் மாரி பார்த்து, அனுபவித்த சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது.
ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வைவிட வாழ்க்கையில் படித்து முன்னேறத் துடிக்கும் ஒரு இளைஞனுக்கு நேர்ந்த சில வன்கொடுமைகளை நேரில் பார்க்கிறோமோ என்று சொல்லுமளவிற்கு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
திருநெல்வேலிக்கு அருகில் உள்ள புளியங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் கதிர். சட்டம் படிப்பதற்காக சட்டக் கல்லூரியில் சேர்க்கிறார். ஆனால், கல்லூரி பேராசிரியர் ஒருவராலேயே 'கோட்டா'வில் வந்தவன் என்று அவமானப்படுத்தப்படுகிறார். தனக்கு நேரும் அவமானங்களையும் மீறி படிப்பை முடிக்க ஆசைப்படுகிறார் கதிர். உடன் படிக்கும் ஆனந்தி, கதிரின் அப்பாவித்தனத்தைப் பார்த்து நட்பாகப் பழக ஆரம்பிக்கிறார். இருவருக்குமான நட்பு நெருக்கமாகிறது. ஆனந்தியின் மனதில் காதல் அரும்புகிறது.
ஆனால், தன்னால் அவருக்கு எந்தப் பிரச்சினையும் வரக் கூடாதென கதிர் ஒதுங்கியே இருக்கிறார். ஆனந்தி வீட்டில் நடக்கும் ஒரு திருமணத்திற்குச் செல்லும் கதிர் அங்கு அடித்து அவமானப்படுத்தப்பட்டு விரட்டி அனுப்பப்படுகிறார். பின்னர் கதிரை கொலை செய்யவும் திட்டம் தீட்டுகிறார்கள்.
அவற்றையெல்லாம் எதிர்கொண்டு கதிர் சட்டப் படிப்பை படித்து முடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
பரியேறும் பெருமாள் ஆக கதிர். எந்த ஒரு காட்சியிலும் அவரைக் கதிராக நம்மால் பார்க்கவே முடியவில்லை. பரியேறும் பெருமாள் ஆகவே தெரிகிறார்.
கொஞ்சம் அப்பாவித்தனம், நிறைய கோபம், ஆனந்தியுடன் அழகான நட்பு, யோகி பாபுவுடன் பாசம் என ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய நடிப்பு அவ்வளவு யதார்த்தமாய் அமைந்துள்ளது. இந்த பரியேறும் பெருமாள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான படிக்கட்டுகளில் அழுத்தமாய் கால் பதித்திருக்கிறார் கதிர்.
ஆனந்தி... ஜோ என்கிற ஜோதி மகாலட்சுமி. கல்லூரியில் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்படி ஒரு தோழி கிடைக்க மாட்டாரா என்று ஏங்க வைக்கிறார்.
கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள் கூட நமக்கெல்லாம் இப்படி ஒரு தோழி கிடைக்காமல் போய்விட்டாலே என்று நிச்சயம் ஏங்குவார்கள். கள்ளம் கபடமில்லாத சிரிப்பு, உண்மையான நேசம், பாசம் என அவர் கதாபாத்திரத்தின் மீதே தனி மரியாதை வந்துவிடுகிறது.
இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த ஜோதி மகாலட்சுமி கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் பேசப்படும் ஒரு கதாபாத்திரமாக நிச்சயம் இருக்கும்.
யோகி பாபு, நான் சாதி பார்த்தா உன்னுடன் பழகுகிறேன் என நட்பின் இலக்கணத்தைப் பேசி நெகிழ வைக்கிறார்.
இந்தக் காலத்தில் மட்டுமல்ல எந்தக் காலத்திலிருந்தோ இப்படிப்பட்ட மனிதர்கள் ஒரு சிலர் இருந்து கொண்டுதானிருக்கிறார்கள். சின்னச் சின்ன நகைச்சுவைகளை உதிர்த்து அவருடைய கதாபாத்திரத்தை ரசிக்க வைக்கிறார் யோகி பாபு.
கதிரின் அப்பாவாக ஒரே ஒரு காட்சியில் நடித்தாலும் கலகலக்க வைக்கும் சண்முகராஜன், ஆனந்தியின் அப்பா மாரி முத்து, அண்ணன் லிஜிஷ், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியை, பேராசிரியர் என ஒவ்வொருவருமே அவரவர் கதாபாத்திரங்களாகவே மாறிவிட்டார்கள். கதிரின் அப்பா கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் இதுவரை காட்டப்படாத ஒரு அப்பா கதாபாத்திரம். அதில் நடித்துள்ள தங்கராஜ் தனியாக பாராட்டப்பட வேண்டியவர்.
சந்தோஷ் நாராயணன் இசையில் நெல்லை மண் வாசம் வீசும் பாடல்கள். அனைத்துப் பாடல்களுமே ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக 'கருப்பி, வணக்கம் வணக்கமுங்க..' பாடல்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவில் கல்லூரி காட்சிகளும், கிராமத்து காட்சிகளும் கதையோடு கதாபாத்திரங்களாகவே நம்மை உள்ளிழுத்துச் செல்கின்றன.
படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த பின்னும் இந்த 'பரியேறும் பெருமாள்' படத்தின் பாதிப்பு நம்முள் இருக்கும். இதுவே படத்திற்கும் இதைத் தயாரித்த பா.ரஞ்சித், இயக்குனர் மாரி செல்வராஜ், மற்ற கலைஞர்கள் ஆகியோருக்குக் கிடைத்த வெற்றி.