நடிகர்கள் : பஹத் பாசில், ஐஸ்வர்ய லட்சுமி, திலீஷ் போத்தன், ஷராபுதீன், நிஸ்தார் சேட், விஜிலேஷ் மற்றும் பலர்
ஒளிப்பதிவு : லிட்டில் ஸ்வயம்ப்
இசை : சுசின் ஷ்யாம்
இயக்கம் : அமல் நீரத்
அயூப்பிண்டே புஸ்தகம் படத்திற்குப்பின் இயக்குனர் அமல் நீரத் - பஹத் பாசில் கூட்டணியில் வெளியாகியிருக்கும் படம் தான் இந்த வரதன்
வெளிநாட்டில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் பஹத் பாசில்.
அவரது மனைவி ஐஸ்வர்ய லட்சுமி. இருவரும் சில நாட்கள் ரிலாக்ஸாக இருந்துவிட்டு வரலாம் என சொந்த ஊரான கேரளாவுக்கு வந்து ஐஸ்வர்யாவின் தாத்தாவுக்கு சொந்தமான தோட்ட வீட்டில் தங்குகின்றனர். தோட்ட பராமரிப்பு பணியை காண்ட்ராக்டர் நிஸ்தார் சேட்டிடம் ஒப்படைக்கின்றனர்.
அவரது ஆட்களான ஷராபுதீன், விஜிலேஷ் உள்ளிட்ட மூவர் தோட்ட வேலைசெய்யும் சாக்கில் அவ்வப்போது ஆளில்லாத நேரம் பார்த்து ஐஸ்வர்யாவுக்கு தொந்தரவுகள் தருகின்றனர். இதனால் அதிர்ச்சியாகும் ஐஸ்வர்யா, பஹத்திடம் இதுபற்றி முறையிட்டாலும் அவர் அதை அலட்சியமாகவே எடுத்துக் கொள்கிறார்.
ஒருகட்டத்தில் இந்த கும்பல் ஐஸ்வர்யா வீட்டு பாத்ரூமில் திருட்டுத்தனமாக மொபைல் கேமரா வைக்கும் அளவுக்கு அத்துமீறுகின்றனர்.
இங்கே நிம்மதி குலைவதால், மறுநாள் வெளியூர் சென்று, நண்பர்கள் வீட்டில் சில நாட்கள் தங்கலாம் என இருவரும் முடிவெடுக்கின்றனர். அதற்கு முன்னதாக பஹத் பாசில் வேலையாக டவுனுக்கு செல்ல, வீட்டில் தனியாக இருக்க பயந்த ஐஸ்வர்யா, பக்கத்து கிராமத்தில் இருக்கும் நூலகத்திற்கு கிளம்புகிறார்.
வழியில் இந்த வில்லங்க கும்பல் அவர் வாகனத்தின் மீது மோதி விபத்தை உண்டாக்கி, அவரை சீர்குலைக்கிறது. மருத்துவமனையில் இருந்து பஹத், அவரை வீட்டுக்கு அழைத்து வர, பஹத்தின் அலட்சியத்தின் மீதான கோபத்தில் வெறிபிடித்தவர் போல நடந்து கொள்கிறார் ஐஸ்வர்யா.
இந்தநிலையில் காண்ட்ராக்டர் மகளை அந்தப்பகுதி சிறுவன் காதலிக்கிறான் என தெரிந்து அவனையும், அவனது தாயையும் இந்த வில்லங்க கும்பல் தேடி திரிய, அவர்கள் அதே இரவில் பஹத் பாசில் வீட்டில் தஞ்சம் அடைகின்றனர்.
காண்ட்ராக்டர் மற்றும் இந்த வில்லங்க கும்பல் அந்த நள்ளிரவில் பஹத்தின் வீட்டை முற்றுகையிட்டு அம்மாவையும் பையனையும் வெளியே அனுப்பிவிடுமாறு மிரட்டுகின்றனர். மறுக்கும் பஹத், வீட்டின் கதவை அடைக்க, அந்த கும்பல் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சிக்கிறது. பஹத் பாசில் இந்த விஷயத்திலும், தனது மனைவிக்கு நேர்ந்த அநீதியிலும் என்ன முடிவெடுக்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.
ரொம்பவே இணக்கமான தம்பதியாக பஹத் பாசில் - ஐஸ்வர்ய லட்சுமி இருவரும் ஜாடிக்கேத்த மூடியாக மாறிவிடுகின்றனர். வில்லங்க கும்பல் பற்றி ஐஸ்வர்யா, பஹத்திடம் சொல்லும் போதேல்லாம் அவர் அலட்சியம் காட்டுவது இன்றைய பல கணவன்மார்களின் முகத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.. ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து க்ளைமாக்ஸில் வச்சு செய்யும்போது அப்ளாஸ் அள்ளுகிறார் பஹத் பாசில்.
அந்நிய ஆண்களால் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்ணின் முகமாக யதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.
இதுவரை காமெடியாகவே பார்த்துவந்த 'பிரேமம்' ஷராபுதீன் இயல்பான வில்லத்தனத்தில் அம்சமாக பொருந்துகிறார்.. அதிலும் அவர் கூடவே சுற்றும் விஜிலேஷின் முகத்தில் தான் எவ்வளவு காமம், வன்மம்..?
மனிதர் அந்த கேரக்டராகவே மாறியுள்ளார். காண்ட்ராக்டராக வரும் நிஸ்தார் சேட்டை பற்றி சொல்லவே வேண்டாம். 'ஒழிவு திவசத்தே களி' படம் பார்த்தவர்களுக்கு இவரின் கொடூர முகம் இன்னும் மறந்திருக்காது. இதிலும் அதையே தொடர்ந்துள்ளார். கிராமத்தில் பஹத் பாசிலின் உதவிக்காக வரும் திலீஷ் போத்தன் சில விஷயங்களில் நல்லவராகவும் சில விஷயங்களில் குறிப்பாக கலாச்சார காவலராக மாறி காதலர்களை மிரட்டி பணம் பறிக்கும்போது கெட்டவராகவும் இருமுகம் காட்டியுள்ளார்.
பஹத்-ஐஸ்வர்யா இருவரும் கிராமத்தில் நுழைந்த அந்த கணத்தில் இருந்தே ஏதோ நடக்கப்போகின்றது என்பதை தனது பின்னணி இசையால் நம் மனதை பதற வைக்க ஆரம்பித்து விடுகிறார் இசையமைப்பாளர் சுசின் ஷ்யாம். நாமே பஹத்-ஐஸ்வர்யா பிரச்சனையில் சிக்கிவிட்ட ஒரு மாயத்தோற்றத்தை தனது நேர்த்தியான ஒளிப்பதிவால் உணர வைக்கிறார் கேமராமேன் லிட்டில் ஸ்வயம்ப்.
தனியாக வசிக்கும் ஒரு இளம் தம்பதிக்கு சுற்றியுள்ள சில மனித மிருகங்களால் ஏற்படும் தொந்தரவுகளையும், இந்த விஷயத்தில் ஆரம்பத்திலேயே கணவன்கள் அலட்சியம் காட்டாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் காட்சிக்கு காட்சி ஆணி அடித்தாற்போல் மனதில் பதிய வைக்கிறார்கள்.
இந்த த்ரில்லர் கதையில் கடைசி இருபது நிமிட அதிரடி காட்சிகளால் படத்தை வெற்றிக்கோட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் இயக்குனர் அமல் நீரத்.
மொத்தத்தில் தயாரிப்பாளர் நஸ்ரியா காட்டில் மழைதான்...!