ஏகாந்தம் - விமர்சனம்

நடிப்பு - விவிந்த், நீரஜா, அனுபமா மற்றும் பலர் இயக்கம் - ஆர்செல் ஆறுமுகம் இசை - கணேஷ் ராகவேந்திரா தயாரிப்பு - அன்னை தமிழ் சினிமாஸ் வெளியான தேதி - 21 செப்டம்பர் 2018 நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம் ரேட்டிங் - 1.5/5 தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் அதிகமான சிறிய பட்ஜெட் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

அது வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும், ரசிகர்களின் ரசனையை வைத்து அப்படிப்பட்ட படங்கள் வந்தால் வரவேற்பைப் பெறும். ஆனால், பலரும் வாழ்வியல் சம்பந்தமான படங்களை எடுப்பதாகக் கூறிக் கொண்டு அழுத்தமான கதை இல்லாத படங்களைக் கொடுத்து ரசிகர்களையும் ஏமாற்றி, அவர்களையும் ஏமாற்றிக் கொள்கிறார்கள். 

இந்த 'ஏகாந்தம்' படத்தின் கதைக் களம், கதாபாத்திர வடிவமைப்பு அனைத்துமே மிக இயல்பாக பாராட்டும்படி அமைந்திருக்கின்றன. ஆனால், அழுத்தமான கதை இல்லாதது ஒரு குறை. அதை மட்டும் இயக்குனர் சரி செய்திருந்தால் இந்தப் படம் அனைவருக்குமே மகிழ்ச்சியாக அமைந்திருக்கும். 

பண்ணைக்காடு என்ற ஊரில் இருந்து சென்னைக்கு வேலைச் சென்றவர் விவிந்த். அவருக்கும் அவருடைய மாமன் மகள் நீரஜா இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதுதான் குடும்பத்தினரின் ஆசை. சென்னையில் வீடு கட்டியுள்ள விவிந்த் வீட்டுக்கு அனைவரும் செல்கிறார்கள். திரும்பி வந்து ஊரில் விவிந்த், நீரஜா ஆகியோருக்கு திருமணத்திற்கு நாள் பார்க்கிறார்கள். 

ஆனால், ஜோசியர் இருவரது பொருத்தமும் சரியில்லை என்று அதிர்ச்சி தருகிறார். ஜோசியரை அப்படிச் சொல்லச் சொன்னதே நீரஜா தான் என்பது பின்னர் தெரிய வருகிறது. அவர் ஏன் அப்படி சொல்லச் சொன்னார், அதன் பின் விவிந்த், நீரஜா இருவருக்கும் திருமணம் நடைபெற்றதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. 

மலை கிராமம் ஆன பண்ணைக்காடு ஊரின் அழகும், இயற்கை வைத்தியம் பார்க்கும் விவிந்த் அம்மா அனுபமா, நீரஜாவின் அப்பா தென்னவன் மற்றும் ஊர் மக்கள், சிறுவர்கள், சிறுமியர்கள், ஊரில் எப்போதுமே துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருக்கும் நாயகி நீரஜா என ஒரு கிராமத்தை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். 

 படத்தில் நாயகன் விவிந்த்தை விட நீரஜாவுக்குத்தான் காட்சிகள் அதிகம். விவிந்தி நடித்துவிட வேண்டும் என முயற்சிக்கிறார். ஆனால், அதில் பாதி கிணறைக் கூட அவர் தாண்டவில்லை. நீரஜா இயல்பான அழகுடன், விரிந்த கண்களுடன் இயல்பாக நடித்து ரசிக்க வைக்கிறார். ஒரு படத்தின் நாயகியை படம் முழுவதும் பாவாடை, தாவணியில் பார்த்து எவ்வளவு நாளாயற்று. 

ஊர் மக்கள் கொண்டாடும் இயற்கை வைத்தியர், சிலம்பாட்ட பயிற்சியாளர் என அனுபமா கிராமத்து அம்மாவாக பொருத்தமாக நடித்திருக்கிறார். தென்னவன் வழக்கம் போல மகள் மீது அதிக பாசம் வைத்துள்ள அப்பா. கணேஷ் ராகவேந்திரா இசையில் 'முல்லைய கேளு.. மல்லிய கேளு...' கிராமிய வாசம் வீசும் பாடலாக அமைந்துள்ளது. படத்தின் இயக்குனர் ஆர்செல் ஆறுமுகம் கிராமத்து படைப்பை அதன் பதிவுகளுடனேயே கொடுக்க முயற்சித்திருக்கிறார். அதற்கு மட்டும் தனி பாராட்டுக்கள். அடுத்த வாழ்வியல் படத்தில் இந்தப் படத்தின் குறைகளை சரி செய்து கொள்ளட்டும்.
இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்