இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி கொண்டே வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமை வியாபாரமும் கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்துள்ளது. இந்த படத்தின் அமெரிக்க, கனடா, ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன் மற்றும் தெலுங்கு மாநிலங்கள், தமிழகத்தின் ஒருசில ஏரியாக்களின் வியாபாரங்கள் ஏற்கனவே முடிந்துவிட்டது.

இந்நிலையில் தமிழகத்தை அடுத்து விஜய்க்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ள மாநிலமான கேரளாவில் இந்த படத்தை 'ஆகஸ்ட் சினிமாஸ்' நிறுவனம் ரிலீஸ் செய்யவுள்ளது. இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த நிறுவனம் நடிகர் ஆர்யா, நடிகர் பிரித்விராஜ் மற்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆகியோர்களுக்கு சொந்தமானது.
 
'தெறி' படத்தை கேரளா முழுவதும் பிரமாண்டமாக புரமோஷன் செய்து அதிகளவிலான திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய 'ஆகஸ்ட் சினிமாஸ்' நிறுவனம் திட்டமிட்டுள்ளது.